காஞ்சிபுரம்-திருவள்ளூர் ஒன்றியம்:

காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியம் 26.12.1927 ஆம் ஆண்டு சென்னை பால் வழங்கும் சங்கமாக துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இது தெற்கு ஆசிய கண்டத்தில் முதல் முறையாக பதிவு செய்யப்பட்ட கூட்டுறவு சங்கமாகும். இதன் தொடர்ச்சியாக 10.04.1979 அன்று மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியமாக பதிவு செய்யப்பட்டது. ஒன்றியம் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களை விவகார எல்லையாக கொண்டும், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களை பகுதியாக கொண்டும் சுமார் 564 சங்கங்களிலிருந்து 20126 பால் உற்பத்தியாளர்கள் மூலம் தற்போது நாளொன்றுக்கு 1,17,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. ஒன்றியத்தில் காக்களூரில் 4.5 ஏக்கர் பரப்பளவில் நாளொன்றுக்கு 1,00,000 லிட்டர் திறன் கொண்ட பால் பதப்படுத்தும் பால் பண்ணையும்,  பாலுசெட்டிசத்திரத்தில் 4 ஏக்கர் பரப்பளவில் நாளொன்றுக்கு 30,000 லிட்டர் திறன் கொண்ட பால் குளிரூட்டும் நிலையமும் மற்றும் சானூரில் 4 ஏக்கர் பரப்பளவில் நாளொன்றுக்கு 30,000 லிட்டர் திறன் கொண்ட பால் குளிரூட்டும் நிலையமும் மற்றும் நாளொன்றுக்கு 55,000 லிட்டர் திறன் கொண்ட 10 தொகுப்பு பால் குளிர்விப்பான் மையங்களும் செயல்பட்டு வருகின்றன. 2018-2019-ன் கீழ் புதிதாக 5000 கொள்ளளவு கொண்ட 5 சிறுதொகுப்பு பால் குளிரூட்டும் நிலையங்கள் நிறுவப்பட உள்ளது.

ஒன்றிய பால் சேகரிப்பு பணியில் 51 பால் சேகரிப்பு ஒப்பந்த வழித்தட வாகனங்கள் செயல்படுகிறது. காக்களூர் பால் பண்ணையில் நாளொன்றுக்கு 100000 லிட்டர் பால் கையாளப்படுத்தப்பட்டு வருகின்றது. காக்களூர் பால் பண்ணையின் சேமிப்பு கொள்ளளவு 2,00,000 லிட்டர் ஆகும். காக்களூர் பால் பண்ணையில் நாளொன்றுக்கு 100000 லிட்டர் பால் குளிரூட்டும் சேமப்பு கிடங்கு (Cold Room) உள்ளது. காக்களூர் பால் பண்ணை வளாகத்தில் பால் பைகள் அடிக்கும் தானியங்கி இயந்திரங்கள் 6 உள்ளது, 1 தானியங்கி இயந்திரம் தயிர் மற்றும் மோர் பைகள் அடிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒன்றியத்தில் 2018-19ம் ஆண்டில் 35,000 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் நடப்பு ஆண்டில் நாளொன்றுக்கு சுமார் 77,000 லிட்டராக பால் விற்பனை அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒன்றியம் தற்போது நாளொன்றுக்கு 77,000 லிட்டர் TM, SM, FCM என்ற 3 வகையிலான பால் விற்பனை செய்து வருகிறது. 20,000 லிட்டர் உபரிப்பால் பாக்கெட் பாலாக இணையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

காக்களூர் பால் பண்ணை வளாகத்தில் தலா 50,000 லிட்டர் கழிவு சுத்திகரிப்பு நிலையம் 2 உள்ளது. ஒன்றியம் தற்போது மாதம் ஒன்றுக்கு ரூ.1 கோடி 30 இலட்சம் மதிப்பீட்டுத் தொகை பால் பொருட்கள் மற்றும் உபபொருட்கள் நெய், கோவா, பாதாம் பவுடர், பிஸ்தா பவுடர், தயிர், மோர் மற்றும் மைசூர்பா விற்பனை செய்து வருகிறது. ஒன்றியத்தில் தற்போது பால் விற்பனைக்காக 9 பால் விநியோக ஒப்பந்த வழித்தடம் செயல்பட்டு வருகிறது. காக்களூர் பால் பண்ணை வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள அதி நவீன பாலகம் மற்றும் தரக்கட்டுபாட்டு ஆய்வகம் 13.02.2021 அன்று திறக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகின்றது. ஒன்றியத்தில் தற்போது 3 அதி நவீன பாலகம் செயல்பட்டு வருகிறது.  நடப்பு ஆண்டில் அயனாவரத்தில் அதி நவீன பாலகம் கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது. 

ஒன்றியத்தில் தற்போது 220 முகவர்கள் மற்றும் 20 மொத்த பால் விற்பனையாளர்கள் மூலமாக பால் மற்றும் பால் உபபொருள்கள் விற்பனையில் ஈடுப்பட்டுள்ளனர். பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் மொத்தம் 16 ஆவின் பாலகங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. 2016-17ம் ஆண்டில் ஒன்றியம் இலாபம் ஈட்டியதற்காக ஒன்றியத்தில் பால் ஊற்றிய சங்க உறுப்பினர்களுக்கு ரூ.2.06 கோடி ஊக்கத் தொகை அவர்களின் அனுப்பி பாலின் தரத்திற்கேற்றவாறு வழங்கப்பட்டுள்ளது. ஒன்றிய விவகார எல்லையிலுள்ள 60 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களில் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கடந்த 10 ஆண்டுகளாக இல்லத்திற்கே சென்று கால்நடை மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளும் 10 அலகுகள் செயல்பட்டு வருகின்றன.  மேலும் கடந்த வருடம் 8500 கறவை மாடுகளுக்கு மானியத்துடன் கூடிய காப்பீட்டு வசதி செய்யப்பட்டது. நடப்பு ஆண்டில் 11200 கறவை மாடுகளுக்கு காப்பீட்டு வசதி செய்ய ஒன்றியத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய கூட்டுறவு அமைப்பில் 48000 கறவை பசுக்கள் மற்றும் 700 எருமைகள் உள்ளன. அதில் 20120 கறவை பசுக்கள் மற்றும் 219 எருமை மாடுகள் மூலம் பால் கொள் முதல் செய்யப்படுகிறது. கால்நடை மருத்துவ ஆலோசகர்கள் மற்றும் கிராமப்புற கால்நடை களபணியாளர்கள் மூலமாக 59 மையங்களில் மாதந்தோறும் மூலமாக 6200 செயற்கை கருவூட்டல் செய்யப்பட்டு வருகிறது. ஒன்றியம் பால் உற்பத்தியாளர்களின் நலன் கருதி கால்நடை தீவனத்திற்கு கிலோ ஒன்றுக்கு ரூ.3.00 வரை மானியமாக வழங்கி வருகிறது.  மேலும் பாலின் தரத்தை உயர்த்துவதற்காக சங்கங்களிலிருந்து தாது உப்பு கலவை பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. காக்களூர் பால் பண்ணையில் ரூ.90 இலட்சம் மதிப்பிலான கால்நடை தீவன கிடங்கு மற்றும் நிர்வாக அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் 08.02.2021 அன்று திறக்கப்பட்டது.