கருவூல ஜெர்ஸி பொலிகாளைப் பண்ணை

1. தோற்றம்:

கருவூல ஜெர்ஸி பொலிகாளைப் பண்ணை 29.03.1973 அன்று உதகையில் முன்னாள் தமிழ்நாடு பால் வள நிறுவனத்தின் (தற்போதைய தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம்) நேரடி நிர்வாகத்தின் கீழ் தொடங்கப்பட்டது.

2. இட அமைவு:

இப்பண்ணை வனத்துறைக்கு சொந்தமான 37.725 ஏக்கர் பரப்பளவு நிலத்தை குத்தகைக்கு எடுத்து செயல்பட்டு வருகிறது. மேலும், தமிழ்நாடு கால்நடை பரமரிப்புத்துறை மூலம் ஒதுக்கப்பட்ட 34.33 ஏக்கர் பரப்பளவு நிலத்தைக் கொண்டு காக்காதோப்பு புல் பண்ணை செயல்பட்டு வருகிறது

3. பண்ணையின் பிரிவுகள்:
 

பொலிகாளைப்பண்ணை

இங்கு உயர்தர நோயற்ற ஜெர்ஸி, பிரிசியன் மற்றும் கலப்பின பொலிகாளைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

அ) உறைவிந்துக் குச்சி உற்பத்தி ஆய்வகம்:

இங்கு தரமான விந்து ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு உறைவிந்து குச்சிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆ) உறைவிந்து வங்கி:

உற்பத்தி செய்யப்படும் உறைவிந்து குச்சிகள் முறையாக தனிமைப்படுத்தப்பட்டு சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் உறைவிந்து குச்சிகள் ஈரோட்டில் உள்ள எருமையின உறைவிந்து நிலையத்தின் விநியோகப் பிரிவுக்கு அனுப்பப்பட்டு மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களுக்கு கறவை மாடுகளின் செயற்கை முறைக் கருவூட்டலுக்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

தரக் கட்டுப்பாடு ஆய்வகம்:

இங்கு உறைவிந்து குச்சி ஆய்வகத்தில் தயார் செய்யப்படும் உறைவிந்து குச்சிகள் தரக்கட்டுப்பாட்டு ஆய்வகத்தில் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது.

 

பசுந்தீவனபுல் பண்ணை:

பொலிகாளைப் பண்ணை மற்றும் காக்காத்தோப்பு பண்ணை வளாகங்களில் 53.25 ஏக்கர் நிலப்பரப்பில் பசுந்தீவனம் உற்பத்தி செய்யப்பட்டு இங்கு பரமரிக்கப்படும் காளைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.

 

நிர்வாக அலுவலகம்:

இங்கு நிர்வாகம், கொள்முதல் மற்றும் கிடங்கு, கணக்கு சார்ந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

 

நோக்கங்கள்:

தரமான மரபணு கொண்ட நோயற்ற ஜெர்சி, பிரிசியன் மற்றும் கலப்பின காளைகளிலிருந்து சேகரிக்கப்படும் விந்து மூலம் தயாரிக்கப்படும் உறைவிந்து குச்சிகள் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களுக்கு கறவை மாடுகளின் செயற்க்கை முறை கருவூட்டலுக்காக பயன்படுத்தப்படுகிறது.

கூட்டுறவு வரையறைக்குள் உள்ள நாட்டின கறவை மாடுகளின் பால் உற்பத்தியை அதிகரிக்க, உயர்தர மரபணு கொண்ட நோயற்ற காளைகளில் இருந்து சேகரிக்கப்படும் விந்து மூலம் உற்பத்தியாகும் உறைவிந்து குச்சிகள் செயற்க்கை முறை கருவூட்டலுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பால் உற்பத்தியாளர்களின் சமூக பொருளாதார நிலையை உயர்த்த, தர மேலாண்மை மூலம் தொடர் முன்னேற்றம் அடைய உறுதி பூண்டுள்ளது.

 

பண்ணையின் சிறப்பம்சங்கள்:

இந்தியாவில் இயங்கிவரும் 13 கூட்டுறவு உறைவிந்து உற்பத்தி பண்ணைகளில் இரண்டாவதாக ISO தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம் மற்றும் ISO 9001:12015  தரச்சான்றிதழ் பெற்ற முதல் நிறுவனம்.

மத்திய அரசின் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறையினால் நியமிக்கப்பட்ட மத்திய கண்காணிப்பு குழுவினர் (CMU) இப்பண்ணையினை ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் 2005,  2007 மற்றும் 2015 ஆண்டுகளில் 'A' கிரேட் மற்றும் 2013, 2018, 2021 ஆண்டுகளில் 'B' கிரேட் தரம் இப்பண்ணைக்கு வழங்கப்பட்டது.