கறவையின மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் செயலாக்கம் (DIPA)

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் வையின மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் செயலாக்கம் (DIPA) என்னும் அலகினை நிறுவி அதன் மூலம் பசுமாடுகளின் மரபணு திறனை மேம்படுத்த கலப்பின வம்சாவளி சோதனை திட்டத்தை 1989லும் எருமையின  மரபணு திறனை மேம்படுத்த எருமையின வம்சாவளி சோதனை திட்டத்தை 1993லும் செயல்படுத்தியது.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் அரசு கால்நடை பொலிகாளைப்பண்ணைகளுக்குத் தேவையான கலப்பின காளைக்கன்றுகளை வழங்க 2002 ஆம் ஆண்டு பொலிகாளைக் கன்று உற்பத்தித் திட்டம் தொடங்கப்பட்டது. அத்திட்டமானது 2005 ஆம் ஆண்டு முதல் கள செயல்திறன் பதிவுத் திட்டமாக தொடரப்பட்டு இன்று வரை செயல்பாட்டில் உள்ளது.

வையின மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் செயலாக்கம் (DIPA) கள அளவில் கள செயல்திறன் பதிவுத் திட்டம் (FPRP), இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு காளைகளின் விந்தணு செயல்திறன் கண்டறியும் திட்டம் (IBST) போன்ற திட்டங்களையும், ஒன்றிய அளவில் பஷுசஞ்சீவனி, செயற்கைமுறை கருவூட்டல் சம்பந்தமான உள்ளீடுகளை INAPH மென்பொருள்  மூலம் பதிவு செய்யும் திட்டம் மற்றும் நாடுதழுவிய செயற்கைமுறை கருவூட்டல் திட்டம் போன்ற திட்டங்களையும் செயல்படுத்தி கண்காணித்து வருகிறது.

கறவையின மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் செயலாக்கம் (DIPA) அலகின் நோக்கம்:

  1. அதிக பால் உற்பத்தித் திறன் கொண்ட பசுமாடுகளை கண்டறிதல் மற்றும் நிரூபிக்கப்பட்ட காளை விந்தணுக்களை பசுமாடுகளில் செலுத்தி உயர் மரபணு திறன் கொண்ட பொலிகாளைக்கன்றுகளை உற்பத்தி செய்தல்.
  2. உள்நாட்டு கறவையின மாடுகாளைப் பாதுகாத்தல்
  3. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை வளர்ச்சி நிறுவனம் (TNLDA) மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களைக் கொண்டு தற்போதுள்ள கறவை மாடுகளின் மரபணு திறனை மேம்படுத்துதல்

கள செயல்திறன் பதிவுத் திட்டம் (FPRP)

கள செயல்திறன் பதிவுத் திட்டமானது கலப்பின ஜெர்ஸி மற்றும் காங்கேயம் நாட்டுமாடு இனங்களிலுள்ள அதிக பால் உற்பத்தி திறன் கொண்ட மாடுகளில் நிரூபிக்கப்பட்ட பொலிகாளை விந்தணுக்களை செயற்கைமுறை கருவூட்டல் மூலம் செலுத்தி உயர் மரபணு திறனுள்ள காளைக்கன்றுகளை உற்பத்தி செய்வதாகும். அவ்வாறு உற்பத்தியாகும் காளைக்கன்றுகளை நமது இணையம் மற்றும் அரசு கால்நடைத்துறை பொலிகாளைப் பண்ணைகளுக்கு எதிர்கால விந்தணு உற்பத்திக்காக வழங்கப்படுகிறது.இது வரை சுமார் 422 கலப்பின ஜெர்ஸி காளைக்கன்றுகளும், 57 காங்கேயம் நாட்டுமாட்டுக்கன்றுகளும் நமது இணையம் மற்றும் அரசு கால்நடைத்துறை பொலிகாளைப் பண்ணைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு காளைகளின் விந்தணு செயல்திறன் கண்டறியும் திட்டம் (IBST)

இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு காளைகளின் விந்தணு செயல்திறன் கண்டறியும் திட்டம் விவரிக்கப்படாத அல்லது குறைந்த பால் உற்பத்தித்திறன் கொண்ட கலப்பின பசுக்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட வெளிநாட்டு காளைகளின் விந்தணுக்களை செயற்கைமுறை கருவூட்டல் மூலம் செலுத்தி அதற்கு பிறக்கும் கிடாரிக்கன்றுகளின் பால் உற்பத்தியை ஒப்பீடு செய்வதாகும். இந்திய அரசு வகுத்துள்ள நெறிமுறைகளின்படி ஒரு காளைக்கு குறைந்தபட்சம் 70 கிடாரிக்கன்றுகளின் பால் அளவை ஒப்பீடு செய்ய வேண்டும்.

பஷுசஞ்சீவனி:

பஷுசஞ்சீவனி திட்டத்தின் கீழ் அனைத்துப் பசுக்களும் INAPH இணைய முகப்பு மூலம் பதிவு செய்யப்படுவதாகும். ஒவ்வொரு பசுவிற்கும் வழங்கப்படும் 12 இலக்க குறியீட்டு எண்களை கொண்டு பசுக்களின் உரிமையாளர் பெயர், தகவல், இருப்பிடம், ஆதார் எண், கறவை நிலை போன்றவற்றை INAPH இணைய முகப்பைக் கொண்டு உள்ளீடு செய்ய வேண்டும். கூட்டுறவு வரம்புக்குள் இருக்கும் 10.04 லட்ச கறவையினங்களில் சுமார் 9.80 லட்ச கறவையினங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

செயற்கைமுறை கருவூட்டல் சம்பந்தமான உள்ளீடுகளை INAPH மென்பொருள்  மூலம் பதிவு செய்யும் திட்டம்:

கருவூல பொலிகாளைப் பண்ணை, ஊட்டியிலிருந்து உற்பத்தி செய்யப்படும் உறைவிந்து குச்சிகள் எருமையின உறைவிந்து நிலையத்திலிருந்து செயற்கைமுறை கருவூட்டலுக்காக அனைத்து மாவட்ட ஒன்றியங்களுக்கும் விநியோகம் செய்யப்படுகின்றன. செயற்கை கருவூட்டல் சம்பந்தமான உள்ளீடுகளை INAPH மென்பொருள்  மூலம் பதிவு செய்யும் திட்டமானது பஷுசஞ்சீவனி திட்டத்தின் தொடர்ச்சியாகும். இதன் மூலம் பசுஇனப்பெருக்க நிகழ்வுகளான செயற்கைமுறை கருவூட்டல், சினை பரிசோதனை செய்தல், கன்று ஈனுதல், கன்றுகளை பதிவு செய்தல், தடுப்பூசி விவரம், குடற்புழு நீக்க விவரம் போன்றவற்றை INAPH இணைய முகப்பைக் கொண்டு உள்ளீடு செய்து, கண்காணித்து, சம்பந்தப்பட்ட அறிக்கைகளை தயார் செய்து முழு நம்பகமான தரவுத்தளத்தை பராமரிக்க முடியும்.