தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் விற்பனை பிரிவு

தமிழகத்தில் உள்ள ஊரக பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார நிலையைக் கருத்தில் கொண்டும் அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாநிலத்தில் உள்ள நுகர்வோர்களுக்கு சரியான விலையில் தரம் மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்க செய்ய  வேண்டும் எனும் நல்நோக்கத்துடனும் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் தோற்றுவிக்கப்பட்டு  ஒரு வணிக நிறுவனமாக மட்டுமல்லாமல் ஒரு சமூக இயக்கமாகவும் இயங்கி வருகிறது.

இணையத்தின் மூன்று பால் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் பால்,   அம்பத்தூரில் உள்ள பால் பொருட்கள் பண்ணை மற்றும் ஒன்றியங்களின் பண்ணைகளில் தயாரிக்கப்படும் பல்வேறு பால் பொருட்களை சென்னை  மாநகரில் விற்பனை செய்வதற்கென ஒரு  தனி விற்பனை பிரிவு (Marketing Division) உருவாக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர் மற்றும் அதன் புறநகர் சார்ந்த பகுதிகளில் பால் மற்றும் பால் பொருட்களின் சந்தை மிகப் பெரியது. இந்த சந்தையினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள இணையத்தின் விற்பனை பிரிவு முனைப்பான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகின்றது.  இவ்வகையில் சென்னை பெருநகரில் நடைபெறும் பால் விற்பனையில் 50 விழுக்காடிற்கும் மிகுந்த அளவினை தற்போது ஆவின் தக்கவைத்துள்ளது

பால் மற்றும் பால் பொருட்களின் வகை:

இணையத்தின் விற்பனை பிரிவு கீழ்க்கண்ட பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகிறது.

பால் வகைகள்:

  1. சமன்படுத்திய பால் - (TM)     3.0% கொழுப்பு; 8.5% இதரச் சத்து
  2. நிலைப்படுத்தியப் பால் - (SM4.5% கொழுப்பு; 8.5% இதரச் சத்து
  3. நிறைகொழுப்புப்  பால் - (FCM6.0% கொழுப்பு; 9% இதரச் சத்து
  4. இருநிலை சமன்படுத்தியப் பால் - (DTM1.5% கொழுப்பு; 9% இதரச் சத்து
  5. ஆவின் டீ மேட்-   (Teamate) 6.5% கொழுப்பு; 9.5% இதரச் சத்து

பால் பொருட்கள்:

நெய், வெண்ணெய், மோர், தயிர், லஸ்ஸி , யோகர்ட், குலாப்ஜாமுன், ரசகுல்லா, பால்கோவா,  பலவித நறுமணப்பால் மற்றும் ஐஸ்கிரீம்  போன்ற ஏறத்தாழ 150 வகைப்பட்ட பால் பொருட்கள்.

விற்பனை மையங்கள்

ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் நுகர்வோர்களையும் பொது மக்களையும் எளிதில் சென்றடைவதற்கு ஏதுவாக கீழ்க்காணும் கட்டமைப்பு வசதிகளை விற்பனைப் பிரிவு ஏற்படுத்தியுள்ளது.

1. மாதாந்திர பால் அட்டைகளை விற்பனை செய்திடவும் அட்டைதாரர்களுக்கு செய்யப்படவேண்டிய பால் விநியோகத்தினை கண்காணித்திடவும்  நகரில் பரவலாக அமைக்கப்பட்டுள்ள 27 வட்டார அலுவலகங்கள் மற்றும் 49 பால் நுகர்வோர் கூட்டுறவு சங்க அலுவலகங்கள்.

2. தினசரி பால் விநியோகம் செய்திட கீழ்க்காணும் பால் விற்பனை மையங்கள் இயங்கி வருகின்றன

வ.எண்

  பால் விற்பனை மையங்கள்

மொத்தம்

1

பால் டெப்போக்கள்(Milk Depot)

456

2

பால் வழங்கு முனையங்கள்(Milk Delivery Points)

596

3

இணையத்திற்கு சொந்தமான சாதாரண பாலகங்கள்

15

4

அதிநவீன பாலகங்கள்(Hi-Tech Parlour)

21

5

சில்லறை விற்பனையாளர்கள்(FRO)

753

6

AVM பாலகங்கள்

175

7

முகவாண்மை வழங்கப்பட்ட சில்லறை விற்பனையாளர்கள் (NFRO)

442

 

பால் விநியோக வழித்தடங்கள்:

பால் பண்ணை

தடங்கள்

C&F வழித்தடங்கள்

அம்பத்தூர் பால் பண்ணை

45

35

மாதவரம் பால் பண்ணை

45

45

சோழிங்கநல்லூர் பால் பண்ணை

56

68

மொத்தம்

146

148

 

இதர விற்பனை வழிகள்(Sales Channels):

  1. நிறுவன வழங்கல் (Institution Supply) அடிப்படையில் கம்பெனிகள், கல்லூரிகள், அரசினர் மருத்துவமனைகள், விடுதிகள் மற்றும் படைக்கலன் முகாம்கள் என மொத்தம்  260 அமைப்புகளுக்கு தேவைக்கேற்ப ஆவின் பால்  மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

  2. பகல் நேர விநியோகம் எனும் அடிப்படையில் (Day time supply) இணைய வண்டிகளில் பால் எடுத்துச்சென்று பல்வேறு சில்லறை  விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்படுகிறது.

  3. சிறப்பு பதிவு (Special Orders) என முன்கூட்டியே பணம் செலுத்தி பதிவு செய்துக்கொண்டதன் அடிப்படையில் திருமணம் மற்றும் பல்வேறு விழாக்களுக்கு ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் அவர்களின் இடங்களிலேயே சென்று வழங்கப்படுகிறது.  பண்டிகைக் காலங்களில் கூட்டுறவு சங்கங்களுக்கு இத்தகு சிறப்பு பதிவு அடிப்படையில் பால் பொருட்கள்  பெரும் அளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

  4. ஆவின் பால் பொருட்கள், ஆவின் பாலகங்கள் மற்றும் உரிமம் பெற்ற சில்லறை விற்பனை நிலையங்களில் கிடைப்பது போல அவை நகரின் அனைத்து சில்லறை விற்பனை கடைகள் பேரங்காடிகள் போன்றவற்றிலும் விற்பனை செய்யப்படுவதற்கு ஏதுவாக   பால் பொருட்களுக்கான மொத்த விற்பனையாளர்கள் 19 பேர்அமர்த்தப்பட்டுள்ளனர்.

நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சேவை மையம்:

ஆவின் நுகர்வோர் நலனுக்கென 24 மணி நேரமும் செயல்படக்கூடிய நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் சேவை மையம் நந்தனம் விற்பனைப் பிரிவு அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இது ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறையாகவும் இயங்கி வருகிறது.  இங்கு கட்டணமில்லா தொலைபேசி மூலம் பெறப்படும் புகார்கள் அப்பகுதி மண்டல/வட்டார அலுவலர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உடனுக்குடன் நிவர்த்தி காணப்பட்டு வருகிறது.

மின்னஞ்சல் வாயிலாகவும் வாடிக்கையாளர்கள் புகார் தெரிவிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தட வாகனங்களின் இயக்கம் கண்காணிக்கப்பட்டு பால் வழங்கலில் ஏற்படும் தாமதங்கள்/குறைபாடுகள்  உடனடியாகக் களையப்படுகின்றன.  நுகர்வோர் கூட்டங்களை அவ்வப்போது அந்தந்த வட்டார அலுவலங்கங்களில் நடத்தி அவர்களின் குறைகள் கண்டறியப்பட்டு விரைந்து தீர்வு காணப்படுகின்றன.

கட்டணமில்லா தொலைபேசி எண்: 1800 425 3300

பால் மற்றும் பால் பொருட்களின்  விற்பனையை பெருக்கிட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்:

1. இணையத்தின் வாகனங்கள் மூலம் சென்னையில் பகல் வேளையிலும் சில்லறை விற்பனைக் கடைகளுக்கு பால் வழங்குதல் தொடங்கப்பட்டு இவ்விற்பனை அதிகரித்த வண்ணம் உள்ளது.

2. சில்லறை விற்பனை கடைகளில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை பொது மக்கள் எளிதில் அறிந்துக்கொள்ளத் தேவையான வண்ண விளம்பர பலகைகள், அறிவிப்பு பேனர்கள், தொங்கும் விளம்பர அட்டைகள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன.

3. நகரின் சிறப்பு அங்காடிகள் மற்றும் மெகா  மால்களில் ஆவின் பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்கச் செய்யும் ஏற்பாட்டுடன்  ரிலையன்ஸ் பிரெஷ், ரிலையன்ஸ் ரீடைல், பிக் பஜார், போன்ற பெரும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு ஆவின் பொருட்கள் விற்பனை  செய்யப்பட்டு வருகின்றன.

4. குறுகிய இடத்தில் ஆவின் பாலகம் அமைந்திருக்கும் எனும் நெடுநாள் நிலை களையப்பட்டு பல்வேறு வசதிகளை வருகை தருவோர்க்கு வழங்கிடும் வகையில் அதிநவீன பாலகங்கள் கட்டப்பட்டன.  இத்தகையப் பாலகங்கள் பால்  பொருட்களை  விற்பனை செய்து  மக்களை கவர்ந்து வருகின்றன.

5. சென்னையில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் சமையல் கலைஞர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப சலுகை விலையில் பால் மற்றும் பால் பொருட்கள் வழங்கிட முடிவெடுக்கப்பட்டு இது குறித்து அவர்களுடன் கூட்டங்கள் நடத்தி விற்பனை முடக்கிவிடப்பட்டுள்ளது.

6. இதன் வாயிலாக ஆவின் வழங்கிடும் நுகர்வோருக்கான சேவை மற்றும் அதன் உற்பத்தி பொருட்கள் குறித்தான ஒரு விழிப்புர்ணர்வு மக்களிடையே உருவாகி விற்பனை அதிகரிப்பதற்கு பெரிதும் துணை நிற்கிறது.

7. புதிய முயற்சியாக சொமேட்டோ (Zomato) மற்றும் டன்சோ (Dunzo) ஆகிய நிறுவனங்களில்  இணையவழி விற்பனை வாயிலாக ஒவ்வொருவரின் வீட்டிற்கே ஆவின் பொருட்கள் கிடைக்க வழி ஏற்படுத்தியத்தின் மூலம் விற்பனை பெருகியுள்ளது.

8.  சென்னை பெரு நகரின் மூன்று மண்டலங்களிலும் தொகுதிவாரியாக மொத்த விற்பனையாளர்கள் நியமனம் செய்து அதன் மூலம் அனைத்து வகை மக்களுக்கும் ஆவின் பொருட்கள் கிடைக்க ஏற்பாடு செய்வதன் மூலம் விற்பனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக ஆவின் வழங்கிடும் நுகர்வோருக்கான சேவை மற்றும் அதன் உற்பத்தி பொருட்கள் குறித்தான ஒரு விழிப்புர்ணர்வு மக்களிடையே உருவாகி விற்பனை அதிகரிப்பிற்கு பெரிதும் துணை நிற்கிறது

வெளிநாடுகளுக்கு ஆவின் பால் பொருட்கள் ஏற்றுமதி செய்தல்

  1. கடந்த 2017-ம் ஆண்டில்., "வெளிநாடுகளிலும் ஆவின் பால் பொருட்கள் விற்பனை" என்ற கொள்கை முடிவை தொடர்ந்த பல்வேறு நாடுகளில் ஆவின் முகவர்கள் நியமனம் செய்யப்பட்டு பால் பொருட்கள் விற்பனை துவக்கப்பட்டுள்ளன.  அதன் முதல் கட்டமாக சிங்கப்பூரில் 26.11.2017 அன்று முதல் 6 மாதம் வரை பயன்படுத்தப்படக்கூடிய  (UHT) பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

  2. 6 மாதம் வரை பயன்படுத்தப்பட கூடிய ஆவின் பால் மற்றும் நெய் சேர்த்து பால் பவுடர் மற்றும் நறுமன பால் ஆகிய பொருட்களுக்கான ஏற்றுமதி உரிமத்தை ஆவின் நிறுவனம் பெற்றுள்ளது

  3. அதன் இரண்டாம் கட்டமாக கத்தார் நாட்டில் 01.02.2019 அன்றும் ஆவின் பால் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.

  4. சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் கூடுதலாக  நறுமன பால் மற்றும் பால் உப பொருட்கள் ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன. துபாய் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஆவின் நெய்க்கான ஆர்டர்கள் பெறப்பட்டு அவை சிறந்த முறையில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது..

  5. இதைத் தவிர  வளைகுடா நாடுகளான ஏமன் மற்றும் சில ஆப்பிரிக்க நாடுகளிலும் விரைவில் ஆவின் பால் பொருட்களின் விற்பனையைத் துவக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.