திருவண்ணாமலை பால் பண்ணை மற்றும் பால்பவுடர் தொழிற்சாலை (DCPP)

திருவண்ணாமலை பால் பண்ணை மற்றும் பால் பவுடர் தொழிற்சாலை நாளொன்றுக்கு 2 இலட்சம் லிட்டர் பால் கையாளக்கூடிய திறன் மற்றும் 20 மெட்ரிக் டன் பால் பவுடர் உற்பத்தி செய்யும் திறனுடன் 'நபார்டு நிதி உதவியுடன் ரூ.72.60 கோடி செலவில் திருவண்ணாமலை மாவட்டம் அம்மாபாளையம் கிராமத்தில் 11.11.2014 அன்று நிறுவப்பட்டது. மேலும், அந்த ஆலையின் நீர் தேவையை எதிர்கொள்ள சாத்தனூர் அணையில் இருந்து நாளொன்றுக்கு 5.50 இலட்சம் லிட்டர் தண்ணீரை வழங்குவதற்கான நீர் வழங்கல் திட்டம், தமிழ்நாடு நீர் வழங்கல் மற்றும் வடிகால் வாரியம் மூலம் செயல்படுத்தப்பட்டது.

தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பால் பவுடர் மற்றும் வெண்ணெய் ஆகியவற்றின் சேமிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் 250 மெட்ரிக் டன் வெண்ணெய் கிடங்கு மற்றும் 500 மெட்ரிக் டன் பால் பவுடர் கிடங்கு ரூ.476.50 இலட்சம் செலவில் 2017-2018  ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால் பால் பொருட்களின் நீடித்த காலக் கெடுவை மேம்படுத்துவதற்காக உபரி பாலை வெண்ணெய் மற்றும் பால் பவுடராக மாற்றுவதாகும். இந்த பால் பண்ணையானது நாளொன்றுக்கு 2 இலட்சம் லிட்டர் பால் கையாளக்கூடிய திறனையும், 20 மெட்ரிக் டன் பால் பவுடர் உற்பத்தி செய்யும் திறனையும் மற்றும் 9.5 மெட்ரிக் டன் வெண்ணெய் உற்பத்தி செய்யும் திறனையும் கொண்டுள்ளது. இந்த பால் பண்ணையானது 2017-2018 ஆண்டிலிருந்து நெய் உற்பத்தியை செய்துவருகிறது.

இந்த ஆலை 500 மெட்ரிக் டன் வெண்ணையும், 1,500 மெட்ரிக் டன் பால் பவுடரையும் சேமிக்கும் திறன் கொண்டது. மேலும், ஒரு நாளைக்கு 3 மெட்ரிக் டன் நெய்யை சில்லறை விற்பனைக்கான சிப்பங்கட்டும் உற்பத்தி வசதியையும் இந்த பால் பவுடர் தொழிற்சாலை கொண்டுள்ளது.

இந்த பால் தொழிற்சாலைக்கு ஐஎஸ்ஓ 22000: 2005 (எஃப்எஸ்எம்எஸ்) சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை தொழிற் சாலையானது கொழுப்பு நீக்கப்பட்ட பால் பொருட்கள் மற்றும் நெய்யிற்கான ஏற்றுமதி உரிமம் பெற்றுள்ளது. 2020-2021 ஆம் ஆண்டில், வெண்ணெய் உற்பத்தி 2,988 மெட்ரிக் டன்னாகவும் பால் பவுடர் உற்பத்தி 5616 மெட்ரிக் டன்னாகவும் மற்றும் நெய் உற்பத்தி 528 மெட்ரிக் டன்னாகவும் உள்ளது.